ஜெயிலர் பட வெற்றியால் படுஉற்சாகத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு, பல்வேறு இயக்குனர்களுடன் விதவிதமான கதைகளை கேட்டு நடித்த ரஜினிகாந்திற்கு எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. பேட்ட திரைப்படம் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலும், வசூலில் என்னமோ ஜொலிக்க தவறியது.
இது மட்டுமல்லாமல் அண்ணாத்த, தர்பார், லிங்கா, கோச்சடையான் உள்ளிட்ட திரைப்படங்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானாலும், அழுத்தம் இல்லாத திரைக்கதையால் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இதனால் கதை தேர்வில் மிகுந்த கவனத்தை செலுத்திய ரஜினிகாந்த், நெல்சனிடம் அடுத்த படத்தை ஒப்படைத்தார். பீஸ்ட் தோல்வியால் துவண்டிருந்த அவர், ஜெயிலரில் ரஜினிக்கான மாஸ் காட்சிகளை பார்த்து பார்த்து செதுக்க படம் இமாலய வெற்றி பெற்றது.
ஜெயிலர் திரைப்படம் இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை எட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உற்சாகத்தோடு தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். ஜெய் பீம் திரைப்படத்தை எடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஞானவேல், இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிப்பதாகவும், முக்கியமான கேரக்டரில் பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சன் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல் மலையாள நடிகை மஞ்சுவாரியருக்கும் ஒரு கனமான கதாபாத்திரத்தை ஞானவேல் எழுதியிருக்கிறாராம். என்கவுண்டரை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் தற்போது தெலுங்கு நடிகர் ராணா இணைந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த கேரக்டருக்கு ஏற்கனவே நடிகர் நானியை படக்குழுவினர் தேர்வு செய்து இருந்தனர். ஆனால் அவர் அதிலிருந்து விலக சர்வானந்த் அந்த இடத்தை பிடித்தார். தற்போது அவருக்கு பதிலாகத்தான் ராணா களம் இறக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வருடம் ரஜினிகாந்தின் லால் சலாம், ஞானவேல் உடனான படம் மற்றும் லோகேஷ் கனகராஜின் திரைப்படம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.