கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் அதிரி புதிரி ஹிட்டடித்தது. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைய, வசூலிலும் பின்னி பெடலெடுத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் நாயகியாக நடித்திருந்த ராஷ்மிகாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு நேஷனல் க்ரஷ் என்ற இமேஜை கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்க, தொடர்ந்து விஜய்யுடன் கடந்த ஜனவரியில் வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ஒரு வலம் வருகிறார். தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ராஷ்மிகா அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி வருகிறார்.
இதனிடையே தற்போது தமிழில் அடுத்ததாக ரெயின்போ என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார் ராஷ்மிகா. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் உதவியாளர் சாந்தரூபன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் முன்னதாக நடிக்க நடிகை சமந்தா தேர்வாகியிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் இணைய முடியவில்லை.
இதையடுத்தே தற்போது ராஷ்மிகாவிற்கு அந்த சான்ஸ் கிடைத்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ள நிலையில், நேற்று படத்தின் பூஜை போடப்பட்டு டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
இதனிடையே ரெயின்போ இயற்கை நமக்கு கொடுத்த பெரிய பரிசு என்றும், அதை தொட முடியாது ஆனால் பார்த்து ரசிக்க முடியும், அதேபோல ரெயின்போ படத்தின் கதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, ஆனால் அந்த கதையை திரையில் சிறப்பாக கொண்டு வர முடியும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராஷ்மிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.