பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலேயே முக்கிய இயக்குனர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்த அந்த திரைப்படம் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொரு காட்சிகளும் விவரித்து சாட்டையடி கொடுத்தது.
முதல் படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் உடன் இணைந்த அவர், கர்ணன் படத்தை இயக்கினார். 1990களின் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம், பொடியன்குளம் எனும் கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதையும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் தனக்கே உண்டான காட்சி அமைப்பின் மூலம் விவரித்தார் மாரி செல்வராஜ்.
இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவுடன் அவர் இணைவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியுடன் அவர் கைகோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மாமன்னன் என பெயர் சூட்டப்பட்டது.
சேலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூன் 29ஆம் தேதி வெளியாகி வசூலை வாரி குவித்துள்ளது. ஏஆர் ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிய உள்ள நிலையில், படத்தின் விறுவிறு காட்சி அமைப்பும், கதையமைப்பும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் மாமன்னன் இந்தாண்டின் முக்கிய திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் மாமன்னன் திரைப்படம் நேற்று முன் தினம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் மாமன்னன் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த அளவில் நெட்ஃபிளிக்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும், மாமன்னன் படத்தை பார்த்து வருவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் பயணத்திற்கு பின் இந்தியா திரும்பிய போது, கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மாமன்னன் படத்தை பார்த்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், படத்தையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.