நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. முந்தைய படங்களான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சிம்புவிற்கு இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை துல்கர்சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். சிலம்பரசனின் 48 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தபடம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த கதையானது நடிகர் ரஜினிகாந்திற்கு சொல்லப்பட்ட கதை என்றும் பல்வேறு காரணங்களால் அது நடக்காத நிலையில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாக சொல்லபடுகிறது.
இது குறித்து சிலம்பரசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கனவு நிஜமானது” என்று பதிவிட்டு இருந்தார். இந்தப் படத்தின் பிளாஷ்பேக்கில் சிம்பு போர் வீரனாக நடிப்பதாகவும் அதற்காக தற்போது நீண்ட தலைமுடியுடன் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் லொகேஷன்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இதில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலர் பரிசீலிக்கப்பட்டனர். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், படக் குழுவிடமிருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே இந்தப் படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பிரீ ப்ரொடக்சன் பணிகளுக்காக நேரம் எடுத்துக்கொள்ள இருப்பதால் ஆகஸ்ட் மாதமே படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் சில தினங்களில் படத்தின் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.