”கூழாங்கல்” படத்தின் மூலம் இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் வினோத் ராஜ். இவர் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் இந்திய சார்பாக ஆஸ்கர் விருது விழாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்கர் விருதை பெறவில்லை என்றாலும், பல இயக்குநர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வினோத் ராஜ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு நாயகனாக சூரியும், நாயகியாக மலையாள நடிகை அன்னா பென்னும் நடிப்பதாக தெரிய வந்தது. நாயகியை மையப்படுத்திய கதை என்பதால், படத்திற்கு கொட்டுக்காளி என்று தலைப்பு வைக்கப்பட்டது.
பிடிவாத குணம் கொண்ட பெண்ணின் கதையாக கொட்டுக்காளி உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு மதுரை மற்றுன் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இதனை திரைப்பட விழாவுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டன.
இதன் உச்சமாக பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் முதல்முறையாக திரையிடப்பட்டது. பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வான முதல் திரைப்படம் என்ற சாதனையையும் கொட்டுக்காளி படைத்தது. இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ஒரு நாள் இரவு முழுக்க தூங்கவில்லை என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து சூரி கூறும் போது, அதிகாலை 6.30 மணிக்கு எழுந்த போது சிவகார்த்திகேயன் அழைத்திருந்தார். உடனடியாக மீண்டும் அழைத்து சொல்லுங்க தம்பி என்று கேட்ட போது, நேற்றிரவு கொட்டுக்காளி படத்தை குடும்பத்துடன் பார்த்தேன் அண்ணே.. நான் வேறு மாதிரி நடித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் வேற லெவலில் நடித்திருக்கிறீர்கள்.
படம் பார்த்த பின் மனதளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. நேற்றிரவு முழுக்க தூக்கமே வரவில்லை. அதனால் தான் உங்களை நடுராத்திரியில் அழைத்தேன். நாம் இருவரும் இணைந்து மீண்டும் ஒருமுறை படத்தை பார்ப்போம் அண்ணே என்று கூறினார். சூரி பேசிய வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.