இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அயலான். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படம், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது.
தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர், மிஷன் 1 உள்ளிட்ட படங்களை காட்டிலும் அயலான் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அயலான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
அதுமட்டுமல்லாமல் அயலான் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் பாண்டம் கிராஃபிக்ஸ் நிறுவனம் இணைந்து அயலான் 2 படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் தான் அயலான் படத்தை தனித்துவமாக காட்டியது. ஹாலிவுட் படங்களுக்கு இணையான கிராஃபிக்ஸ் பணிகள் அயலான் படத்தில் இருந்தன.
அயலான் படத்திற்கான வசூல் குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே வெளியான சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்கள் தான் ரசிகர்களின் முதன்மை ஆப்ஷனாக உள்ளது. இதனை தொடர்ந்து பிப்.9ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள லால் சலாம், லவ்வர் படங்கள் வெளியாகவுள்ளது.
இதனால் அன்றைய தினமே அயலான் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தை அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாங்க முயற்சித்தாலும், ஓடிடி மற்றும் சாட்டிலைட் என்று இரண்டிற்கும் சேர்த்து பெரிய தொகை கொடுத்து சன் டிவி நிறுவனம் அயலான் படத்தை தட்டி தூக்கியுள்ளது.