சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சாதித்தவர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அது இது எது நிகழ்ச்சி மூலம் தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்த எஸ்கே, அங்கிருந்து தனது வெற்றி பயணத்தை தொடர ஆரம்பித்தார். மெரினா திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து திரையரங்குகளை கை தட்ட வைத்து அவர், அப்போதே பெரிய அளவில் வருவார் என்று பலராலும் பேசப்பட்டார்.
இதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்க, அங்கிருந்து தனது வெற்றி படிக்கட்டுகளை அவர் அடுக்கினார். இடையிடையே பல்வேறு தோல்வி படங்கள் அமைந்தாலும், அதன் பிறகு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்து மீண்டு வந்தார் எஸ்கே. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் அள்ளி சாதனை படைத்தன.
இதன் பிறகு பிரின்ஸ் படம் படு தோல்வியாக அமைய, அதிலிருந்து மீண்டு வருவதற்கு மாவீரன் உதவியது. தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதை களத்தில் மாவீரன் அமைய, யோகி பாபுவின் பேட்ச் ஒர்க் காமெடியும் அடித்து தூள் கிளப்பியது. இந்த நிலையில் கொரோனாவுக்கு முன்பாகவே அயலான் திரைப்படத்திற்கான பணிகளில் இறங்கினார் சிவகார்த்திகேயன்.
இன்று நேற்று நாளை என்னும் ஹிட் படத்தை கொடுத்த ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்க, ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்தனர். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்தார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தாலும், சிஜி பணிகளில் மிகப்பெரிய சுணக்கம் ஏற்பட்டதால் அயலான் வெளியாகாமல் இருந்தது.
இதை தொடர்ந்து மீண்டும் ரவிக்குமார் – எஸ் கே கூட்டணி அயலானை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினர். இதற்கான சிஜி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், படம் பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது அயலான் திரைப்படத்திலிருந்து டீசர் வெளியாகி உள்ளது.
மொத்தம் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த டீசரில், முதலில் அறிவியல் சார்ந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் கிராமத்து இளைஞனாக சிவகார்த்திகேயன் வருகிறார். ஏலியன் தொடர்பான காட்சிகள் வெளியான, டீசரை சூடு பிடிப்பது போல் அமைந்துள்ளது. ஏலியன் தலையில் தட்டுவதும், அதனை டீ போட சொல்வதும் என எஸ் கே, யோகி பாபு கருணாகரன் ஆகியோர் அதகளம் செய்கின்றனர். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலிருந்து மல்லிப்பூ பாடலை ஏலியன் போட்டு கேட்பதும் சுவாரசியமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் விறுவிறுப்புடன் கலகலப்பாக அமைந்திருக்கும் அயலான் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.