டாக்டர், டான் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை, சற்று அசைத்துப் பார்த்தது பிரின்ஸ் திரைப்படம்.
இதனால் உஷாரான நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், யோகி பாபுவை வைத்து மண்டேலா திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் இரண்டு தேசிய விருதுகளை வென்ற மடோன் அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்தார். மாவீரன் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில், இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எதற்கெடுத்தாலும் பயப்படும் கோழையான ஒரு இளைஞர், வீரனாக மாறினால் எப்படி இருக்கும் என்ற ஒற்றை வரியை மையமாகக் கொண்டு மாவீரன் திரைப்படம் எடுக்கப்பட்டது.
கோழையான இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்த சிவகார்த்திகேயன், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் இடம்பெற்ற விஜய் சேதுபதியின் பின்னணி குரலும், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. மாறுபட்ட கதைகளத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், யோகி பாபுவின் அசத்தலான காமெடியால் மாபெரும் வெற்றியை பெற்றது.
குறிப்பாக படத்தின் முதல் பாகத்தில் யோகி பாபு வரும் காட்சிக்கெல்லாம் ரசிகர்கள் கைதட்டி விசில் அடித்து சிரித்தனர். இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், மாறுபட்ட கதைகளத்தால் மாவீரன் தப்பியது. யோகி பாபுவின் டைமிங் காமெடி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பால் படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாய் திரையரங்குகளில் அலைமோதினர்.
வரும் 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மாவீரன் வெளியாக இருக்கும் நிலையில், அந்தத் திரைப்படம் இதுவரை 89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 35 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இவ்வளவு பெரிய வசூலை பெற்றிருப்பதால் படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயனுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்துள்ளது.