பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். யோகி பாபு நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின், தனது இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனுடன் பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் இதன் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளது. மடோன் அஸ்வினின் முந்தைய படமான மண்டேலா மெகா ஹிட்டாகி தேசிய விருதையும் வென்றதால் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் சமீபத்தில் அதன் ஷூட்டிங் முடிவடைந்தது. முதலில் ஆகஸ்ட் 11ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய நாளில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், சிவகார்த்திகேயன் திரைப்படம் ரேஸில் இருந்து பின்வாங்கியது. இதைத்தொடர்ந்து ஜூலை மாதம் 14ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாவீரன் பட வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே டான் திரைப்படத்தை வாங்கிய அந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது. டான் படம் தன்னை பெரிதாக கவரவில்லை என்றாலும், வசூலில் சக்கை போடு போட்டதாக உதயநிதி ஸ்டாலினை தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை அவர் வெளியிட இருக்கிறார்.
இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் மடோனா அஸ்வின், மாவீரன் ஒரு ஃபேண்டஸி படம் என்றும், ஆனால் இதில் கதாபாத்திரங்கள் அனைவரும் யதார்த்தமாக இருப்பார்கள் எனவும் கூறி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு இது வித்தியாசமான படம் ஆக இருக்கும் எனக் கூறியிருக்கும் இயக்குனர், படத்தின் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
படத்தில் அவர் நகைச்சுவை செய்ய மாட்டார் என்றும், ஆனால் அவரை சுற்றி எழுதப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நகைச்சுவையாக இருக்கும் என்றும் இயக்குனர் மடோனா அஸ்வின் கூறி இருக்கிறார். அடுத்த மாதம் ஜூலை 14ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இழந்துள்ளது.