இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக அல்லாமல், அதன் ஒன்லைனை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாள் வசூலை விடவும் அடுத்தடுத்த நாட்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. முதல் பாதியில் ரவுடியின் கதையாகவும், இரண்டாம் பாதியில் மக்களின் போராட்ட கதை மற்றும் அதன் அரசியல் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சினிமா பித்தனாக குறிப்பாக கிளிட் ஈஸ்ட்வுட் பித்தனாக நடித்துள்ள லாரன்ஸின் கதாபாத்திரம் பாராட்டுகளை குவித்து வருகிறது.
அதேபோல் வழக்கமாக வசனங்களில் மாற்றங்கள் செய்யும் எஸ்ஜே சூர்யா, இம்முறை எமோஷனல் காட்சிகளில் கண்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சட்டிஸான கதாபாத்திரம் என்றாலும் சில இடங்களில் லாரன்ஸையே ஓரம் கட்டும் அளவிற்கு எஸ்ஜே சூர்யா நடித்திருப்பது ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஆனால் எஸ்ஜே சூர்யா இந்த கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதிக்கவில்லை என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது, நான் எஸ்ஜே சூர்யாவிடம் கதையை கூறிவிட்டு, நடிக்க முடியுமா என்று கேட்டேன். ஆனால் ஒரு 5 நாட்கள் நேரம் கொடுங்கள், யோசித்து சொல்கிறேன் என்று கூறினார். இதனால் என் கதையை அவர் நம்பவில்லை என்று தவறாக புரிந்துகொண்டேன். யோசித்து பதில் சொல்லும் அளவிற்கான கதையை நான் எழுதவில்லை என்ற கோபத்தில் எஸ்ஜே சூர்யா கதாபாத்திரத்திற்கு வேறு நபரை தேடினேன்.
அதன்பின் லாரன்ஸ் மாஸ்டர் அவரிடம் பேசினார். அப்போது எஸ்ஜே சூர்யா தரப்பில், கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதற்காக என் மனதில் 5 நாட்கள் கதையை ஓட்டி பார்க்கிறேன் என்று தான் கூறினேன். அதனை கார்த்திக் சுப்புராஜ் தவறாக புரிந்துகொண்டார். அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று தெரிவித்திருந்தார். அதன்பின் எங்களுக்குள் இருந்த மனஸ்தாபங்களை சரிசெய்து படப்பிடிப்புக்கு சென்றதாக கூறியுள்ளார்.