தமிழ் சினிமாவில் நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், கோவை சரளா, சந்தானம் ஆகியோருக்கு பிறகு நகைச்சுவையில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் சூரி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார். இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
அந்தப் படத்தில் இளைஞர்கள் அனைவரும் பரோட்டா கடையில் இருக்க, சூரி ஒருவர் மட்டும் பரோட்டா பந்தயத்தில் பங்கேற்று நம்மை பிரமிக்க வைப்பார். இந்த காமெடி சரியாக வொர்க் அவுட் ஆனதால், அன்று முதல் ரசிகர்களால் பரோட்டா சூரி என்று அறியப்பட்டார். இந்த திரைப்படத்திற்கு பிறகு சூரிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகர், கோலிவுட்டில் அடித்து தூள் கிளப்ப ஆரம்பித்தார். குறிப்பாக, சிவகார்த்திகேயன் – சூரி கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றன. இருவரும் டைமிங் காமெடியை அள்ளித் தெளித்ததால் படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. இதன் பிறகு சில திரைப்படங்கள் சூரிக்கு கை கொடுக்காமல் போனது.
அவரது நகைச்சுவை தற்போது எல்லாம் எடுபடவில்லை என்றும், பழைய காமெடிகளை அவர் அடித்து வருவதாகவும் பலர் குறை கூறினர். மேலும் இணையத்திலும் சூரி கடுமையாக கிண்டலுக்கு ஆளானார். இப்படியான நேரத்தில் தான், நடிகருக்கு வெற்றிமாறனுடன் இணையும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது.
விடுதலை படத்தை இயக்கிய வெற்றிமாறன், அதில் சூரிக்கு முதன்மை கதாபாத்திரத்தை கொடுத்தார். நடிகரும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு கச்சிதமாக நடித்தார். படம் முழுவதும் குமரேசன் ஆகவே வாழ்ந்த சூரியை பலரும் வாழ்த்தினர். தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சூரி மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்திருக்கிறார். இந்த முறை அவரது கதையில் உருவாகும் திரைப்படத்தை, துரை செந்தில்குமார் இயக்குகிறார். ஏற்கனவே இவர் எதிர்நீச்சல் மற்றும் கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கும்பகோணத்தில் இதற்கான சூட்டிங் பட பூஜையுடன் தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.