மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள திரைப்படம் லியோ. விஜய் தவிர்த்து, நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த், நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
126 நாட்கள் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. அக்,19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. இதுவரை இல்லாத வித்தியாசமான விஜயை ரசிகர்கள் கண்டனர்.
அந்த ட்ரெய்லரிலேயே கார் சேஸிங், கழுதைப்புலியுனான சண்டை, 100 பேர் உடன் போடும் சண்டை என்று ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இளமையான விஜயை அதிக காட்சியில் காட்டாமல் படக்குழு சஸ்பென்ஸ் வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் விளம்பரப் பணிகளை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அதேபோல் லியோ படத்திற்கு ஸ்பெஷல் ஷோ இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. ஏனென்றால் ஜெயிலர் படத்திற்கே ஸ்பெஷல் காட்சி இல்லாததால், லியோ படத்திற்கும் நிச்சயம் இருக்காது என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால் தயாரிப்பு தரப்பிலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் லியோ படத்திற்கு ஸ்பெஷல் காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு ஒருநாளில் 5 காட்சியும், அதன்பின் 4 காட்சிகளும் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் காட்சிக்கான நேரம் காலை 5 மணியா அல்லது 4 மணியா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனுமதி கிடைக்காத நிலையில், லியோவிற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.