தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் தற்போது பலரது பார்வையும் லியோ மீதுதான் விழுந்து உள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக லியோ இருப்பதால், அதற்கான வரவேற்பு பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
மாஸ்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக ஏற்ற இறக்கங்களை பெற்றாலும், வசூலில் சாதனை புரிந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாதி சற்று தொய்வாக இருந்த நிலையில், அதனை லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டிருந்தார். அதனை விஜய் படமாக எடுக்கப் போய் தான் சிறிது சறுக்கல் ஏற்பட்டது என்றும், இந்த முறை நிச்சயமாக இது என் படமாக தான் இருக்கும் என்றும் அடித்துக் கூறினார். இயக்குனரின் இந்த வார்த்தைகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் புதிதாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்னும் எல் சி யூ கான்செப்ட்டை லோகேஷ் கனகராஜ் கொண்டு வந்தார். இந்த யுக்தி ரசிகர்கள் மத்தியில் கிளிக் ஆனதால், விக்ரம் திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது. இந்த நிலையில், தற்போது லியோ திரைப்படமும் எல் சி யு கான்செப்ட் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்ரமில் இருந்த சில நட்சத்திரங்கள், லியோவிலும் இருப்பதாக கூறப்படும் நிலையில் படம் நிச்சயம் எல் சி யு வில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வரும் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருப்பதால் அதற்கான ப்ரொமோஷன்களில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதலாவதாக லியோவில் இருந்து அடுத்தடுத்த மொழிகளில் பட போஸ்டர்களை, தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிட்டு வருகிறார். முதலில் தெலுங்கில் வெளியான போஸ்டரில், மிக அமைதியாக விஜய் இருப்பது போல் காட்டப்பட்டிருந்தது. அதில், அமைதியாக இருங்கள், போரை தவிருங்கள் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக கன்னடத்தில் வெளியான போஸ்டரில், துப்பாக்கி நடுவே விஜயின் முகம் காட்டப்பட்டு அவர் மிகவும் சோகமாக இருப்பது போல் புகைப்படம் இருந்தது. அதிலும் அமைதியாக இருங்கள், சதி திட்டத்திலிருந்து தப்பியுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டர் தமிழில் வெளியாகி உள்ளது. அதில் விஜய், ஆயுதத்தை தயார் செய்வது போல அட்டகாசமான ஸ்டில் வெளியாகியுள்ளது. இதில் அமைதியாக இருங்கள், போருக்கு தயாராகுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து கதையை சொல்வது போல ஒவ்வொரு போஸ்டர்களும், அதற்கேற்ற வசனங்களும் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் மிகத் தெளிவாக காய் நகர்த்துவதாகவும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அன்றைய தினமே டீசர் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளனர்.