ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி, தோல்வியில் துவண்டு இருந்த ரஜினிகாந்திற்கு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. முன்பை விட தற்போது படுஉற்சாகத்தில் இருக்கும் அவர், அடுத்தடுத்த படங்கள் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். முதலில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கும் இந்த திரைப்படத்தில், ரஜினிக்கு சிறப்பு தோற்றமாம். அவருக்கு மொய்தீன் கான் என்னும் கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினி இணைகிறார். முதலில் ஞானவேல் – ரஜினிகாந்த் இணையும் படம்தான் உருவாகிறது. இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இணைந்திருக்கும் நட்சத்திர பட்டாளம்தான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்தி தெலுங்கு மலையாள திரை உலகில் இருக்கும் முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் நடிக்கிறார்கள். மலையாளத்திலிருந்து மஞ்சு வாரியர், பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கில் இருந்து நடிகர் ராணா இடம்பெற்றுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக பாலிவுட்டில் இருந்து அமிதாப்பச்சன் இந்த படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்திலும் இதே ஃபார்முலாவை தான் பயன்படுத்தி இருந்தார்கள்.
கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத்திலிருந்து மோகன்லால், இந்தி திரை உலகில் இருந்து ஜாக்கி ஜெரப் என முக்கிய நட்சத்திரங்கள் ஜெயிலரில் இடம் பெற்றிருந்தனர். இதில் ரஜினிக்கு போலவே சிவராஜ்குமார் மற்றும் மோகன் லாலுக்கு மாஸான காட்சிகள் இருந்ததால் தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி, ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களிலும் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. இப்போது இதே பார்முலாவை தான் ரஜினியின் அடுத்த படத்திற்கும் பயன்படுத்துகிறது.
இதனிடையே படத்தில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களுக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் வருகிறாராம். மகனாக பகத் பாசிலும் பகத் பாசிலின் மனைவியாக துஷாரா விஜயனும் நடிக்கிறார்களாம். ரஜினியின் மகளாக ரித்திகா சிங் வருகிறாராம். ராணா தான் படத்தின் வில்லனாம். இதற்கான பட பூஜை இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும், அடுத்ததாக குமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் இது படமாக்க இருக்கிறது. இதில் குமரி வட்டார வழக்கு மொழியை ரஜினி பேசுகிறாராம். பட பூஜையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக வரும் ரக்சனும் கலந்திருக்கிறார். ஏற்கனவே துல்கர் சல்மான் உடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவர் நடித்து இருந்தார். தற்போது அவரும் இணைந்திருப்பது திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.