தர்பார், அண்ணாத்த எனத் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு, மிகப்பெரிய கம் பேக்கை கொடுத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர். சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களே இடம் பெற்ற இந்த திரைப்படம், கடந்த 10 ஆம் தேதி வெளியாகி வசூலை குவித்தது.
ரஜினிக்கு என பார்த்துப் பார்த்து பக்காவாக மாஸ் காட்சிகளை வைத்த நெல்சன், சிவராஜ்குமாருக்கும், மோகன்லாலுக்கும் இறுதிக்காட்சியில் மாஸ் மொமென்ட்களை வைத்து அசர வைத்தார். இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் படம் வசூல் வேட்டை நிகழ்த்தியது. ரஜினிகாந்த் யோகி பாபு தொடர்பான நகைச்சுவை காட்சிகள் கிளிக்காக, முதல் பாதியின் இடைவெளி காட்சியில் மிரட்டி இருந்தார் நெல்சன்.
இரண்டாம் பாதி சம்பந்தமில்லாமல் அங்கும் இங்குமாய் காட்சிகள் நகர்ந்தாலும், படத்திற்கே உண்டான மாஸ் காட்சிகள் சரியான இடத்தில் இருந்ததால் ஜெயிலர் திரைப்படம் வாகை சூடியது. ஜெயிலர் திரைப்படம் 525 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் அள்ளியதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, ரிஷிகேஷ் கேதர்நாத், பாபாஜி குகை கோயில்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ஜார்க்கண்ட் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்த ரஜினிகாந்த், லக்னோவில் உத்திர பிரதேச துணை முதலமைச்சர் உடன் ஜெயிலர் படத்தைப் பார்த்தார். இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து வணங்கினார்.
இந்த சம்பவம் பெரும் பேசுபொருளான நிலையில், யோகி சன்னியாசி கால்களில் விழுவது தனது பழக்கம் என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் தயாராகி வருகிறார். இதனிடையே பெங்களூருக்கு திடீரென பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள ராகவேந்திரா மடத்தில் தரிசனம் செய்தார். பின்னர் ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு சென்ற ரஜினிகாந்த், தாம் அங்கு நடத்துனராக பணியாற்றியதை நினைத்துப் பார்த்தார். தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரஜினிகாந்தின் இந்த பயணம் இணையதளத்தில் தற்போது வைரலாகி உள்ளது.