எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட கிளிப்ம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் திஷா படானி, யோகி பாபு, கோவை சரளா, சன்னி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இதன்படப்பிடிப்பு கொடைக்கானல், கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது சுதா கொங்காரா அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இதன் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கும் சூழலில், சூர்யா நடிக்கவுள்ள படத்திற்கான முதற்கட்ட பணிகளில் தீவிரமாகி வருகிறார் சுதா கொங்காரா. இந்தப் படத்தில் வில்லன் நடிகரான விஜய் வர்மாவை நடிக்க வைக்க சுதா கொங்காரா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமன்னாவின் காதலரான விஜய் வர்மா ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கல்லி, மிர்சாபூர், லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட படம் மற்றும் வெப் சீரிஸில் நடித்து பிரபலமடைந்துள்ளார். சூர்யாவின் படத்தில் விஜய் வர்மா வில்லனாக நடிக்கும் பட்சத்தில் பாலிவுட்டில் அந்தப் படம் கவனம் பெறும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் படமும் பான் இந்தியா படமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தமன்னாவின் காதலரான விஜய் வர்மா ஏற்கனவே தெலுங்கு, இந்தி படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அனுராக் காஷ்யப் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பில் இருக்கும் விஜய் வர்மாவை அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க வைக்க பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூர்யாவின் படத்தை தொடர்ந்து பல்வேறு முக்கிய நடிகர்களின் படத்திலும் விஜய் வர்மா ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.