சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பிறகு காமெடியனாக மாறி இன்று ஆக்சன் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராணுவ பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, காஷ்மீரில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைவதாக பேசப்பட்டது. மேலும், இந்தி திரைப்படத்தில் அவர் அறிமுகமாவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழில் சீம ராஜா, ஹீரோ, மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ் உள்ளிட்ட படுதோல்வி திரைப்படங்களை எஸ்கே கொடுத்தாலும், அதிலிருந்து எளிதாக மீண்டு வந்து மிகப்பெரிய வெற்றியை கொடுப்பதால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற நடிகராக அவர் விளங்கி வருகிறார்.
இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் உடன் அவர் இணையும் திரைப்படத்தில், 45 கோடி ரூபாய் அளவுக்கு எஸ் கே சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக, படத்திற்கான வேலையில் சுணக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஏ ஆர் முருகதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்த முருகதாஸ், இருவரும் இணையப் போகும் திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக சம்பள பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கூறினர்.
இந்த நிலையில் புதிய தகவலாக, தெலுங்கு திரை உலகை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமே ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் படத்தை எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் என்னும் நிறுவனம்தான் எஸ் கே-வை வைத்து இந்த காலத்தில் இறங்கி உள்ளது. ஏற்கனவே தெலுங்கில் நேரடியாக அறிமுகமாக ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன், பிரின்ஸ் திரைப்படத்தை கொடுத்தார். முகம் சுளிக்கும் அளவுக்கு காட்சிகளுடன் அளிக்கப்பட்ட இந்த திரைப்படம், இரு மொழிகளிலும் படு தோல்வியை சந்தித்தது.
இதனால் கடுப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன், எப்படியாவது தெலுங்கு திரையுரையில் பெயர் வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதாக பேசப்பட்டது. இது உண்மைதான் என்பதற்குப் போல, மாவீரன் படத்தின் தெலுங்கு உரிமையை ரவிதேஜா வெளியிட்டார். இப்படியான சூழ்நிலையில்தான் தனது அடுத்த படத்தை, நேரடியாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார். இதனால் இந்த திரைப்படம் இரு மொழிகளிலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. தமிழில் இத்தனை தயாரிப்பாளர்கள் இருக்கும்போது, சிவகார்த்திகேயன் தெலுங்கு பக்கம் மீண்டும் போகத் துடிப்பதை இங்கு பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.