புஷ்பா படத்தின் மூலமாக நடிகர் அல்லு அர்ஜூன் பான் இந்தியா நாயகனாக மாறியுள்ளார். இதனால் புஷ்பா 2 படத்தை பெரிய ஹிட்டாக்க வேண்டும் என்று கூடுதல் நேரம் ஒதுக்கி படக்குழு பணியாற்றி வருகிறது. புஷ்பா 2ஆம் பாகத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வரும் நிலையில், ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜூன் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனால் புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் புதிய படங்கள் தொடர்புடைய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்திற்கு பின் ஏற்கனவே நடிகர் அல்லு அர்ஜூன், இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின் நடிகர் அல்லு அர்ஜூன் தமிழ் இயக்குநர்களின் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக ஏ.ஆர்.முருகதாஸ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரிடம் கதை கேட்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி அடுத்ததாக இணையவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய இயக்குநராக மாறிவிட்டார் இயக்குநர் அட்லீ. இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க டாப் தயாரிப்பு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸிற்கு முன்பே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் இயக்குநர் அட்லீ-க்கு மிகப்பெரிய அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு, படம் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ கதை, திரைக்கதை எழுதும் பணிகளில் திவீரமாக இருந்தார். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தார். இதனால் அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி இணைவது உறுதியாகியது. இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஓகே சொல்லியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி இணையும் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நாயகியாக நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க இயக்குநர் அட்லீ அணுகியுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜூன் பிறந்தநாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூன் – த்ரிஷா கூட்டணி முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.