மாமன்னன் படம் ஹிட்டானதை தொடர்ந்து, வடிவேலுவை வைத்து கமல்ஹாசன் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜின் 3வது படம்
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலேயே முக்கிய இயக்குனர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்த அந்த திரைப்படம் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொரு காட்சிகளும் விவரித்து சாட்டையடி கொடுத்தது. பா ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார் மாரி செல்வராஜ்.
முதல் படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் உடன் இணைந்த அவர், கர்ணன் படத்தை இயக்கினார். 1990களின் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம், பொடியன்குளம் எனும் கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதையும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் தனக்கே உண்டான காட்சி அமைப்பின் மூலம் விவரித்தார் மாரி செல்வராஜ்.
பாராட்டைப் பெற்ற வடிவேலு
இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவுடன் அவர் இணைவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியுடன் அவர் கைகோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மாமன்னன் என பெயர் சூட்டப்பட்டது. சேலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலரும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில் படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி வசூலை வாரி குவித்துள்ளது.
வடிவேலு படத்தை எடுக்கும் கமல்
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நின்றதில் இருந்து வடிவேலுக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. சரியான திருப்புமுனைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வடிவேலுவுக்கு, மாமன்னன் திரைப்படம் சிறந்த கம்பேக் ஆக அமைந்தது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சிம்பு படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், அடுத்ததாக வடிவேலு வைத்து ஒரு படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் இதில், வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.