ஷங்கர் இயக்கிய எந்திரன் மற்றும் நண்பன் படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அட்லி. அதன்பின் ஆர்யா, ஜெய், நயன்தாரா மற்ரும் நஸ்ரியா ஆகியோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். அந்தப் படம் பெருவெற்றியடைந்தது. ஆனால் மெளன ராகம் படத்தின் மூலக் கதையை அப்படியே அட்லி காப்பியடித்தது ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டது.
அதேபோல் விஜய் வைத்து இயக்கிய தெறி படம் விஜய்காந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் காப்பி என்று விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதர்கள் படத்தின் மூலக்கதை மையமாக அமைந்தது. அதில் கொஞ்சம் மழைச் சாரல் போல் மெடிக்கல் மாஃபியா கதையை உள்ளே சொருகி பெரிய ஹிட் கொடுத்தார் அட்லி.
தொடர்ந்து விஜயை வைத்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கிய பிகில் திரைப்படம், ஷாரூக் கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியாவின் அப்பட்டமான காப்பியாக அமைந்தது. இந்தப் படமும் பெரும் வெற்றிபெற, அட்லி காப்பியடித்தே பெரிய இயக்குநராகிவிட்டார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கினர்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கதையும் ஏன் பழையப் படத்தின் கதையை ஒத்திருக்கிறது என்ற அட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, சரி கம பத நீ சா என்று 7 ஸ்ரங்கள் தான். அதுபோல் தான் சினிமாவும் என்று டிசைன் டிசைனாக அள்ளி பொய்யை கட்டவிழ்த்துவிட்டார். இருப்பினும் அட்லியை கிண்டல் செய்யாத ரசிகர்களே இல்லை என்ற நிலை தான் இப்போது உள்ளது.
இந்த நிலையில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கவுரி கிஷன் ஆகியோர் நடித்துள்ள ”அடியே” திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் மெளன ராகம், அபூர்வ சகோதரர்கள், சத்ரியன், சக்தே இந்தியா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அட்லி என்று குறிப்பிடப்பட்டு படக்குழுவினர் கிண்டல் செய்துள்ளனர். ரசிகர்கள் கிண்டல் ஒரு பக்கம் இருக்க, இப்போது சினிமாவிலும் அட்லியின் பெயர் கிண்டலுக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.