தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் கொடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குநர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அஞ்சாதே, நந்தலாலா, முகமூடி, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். அத்துடன் தனக்கென ஓர் ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கினார். மேடை பேச்சுகளில் அடித்து தூள் கிளப்பும் மிஷ்கினின் உரையை கேட்பதற்கு என்றே இங்கு ஒரு கூட்டம் உண்டு.
இயக்கம் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ராட்சசனாக விளங்கி வருகிறார் மிஷ்கின். சவரக்கத்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றிய அவர், பேச்சுலர் உள்பட பல்வேறு படங்களில் நடித்தார். தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் மிஷ்கினுக்கு நெகட்டிவ் ரோல் என்று கூறப்படுகிறது.
இதில் கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. காஷ்மீர், சென்னை, தலக்கோணம் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்த மாதம் 19ம் தேதி படம் வெளியாகி இருப்பதால், லியோவின் வேலைகளில் படக்குழு முழு வீச்சாக இறங்கியுள்ளது. படத்தை பற்றி பேசிய தயாரிப்பாளர் லலித்குமார், வரும் வாரங்களில் இருந்து படம் வெளியாகும் வரை அப்பேட்கள் வந்து கொண்டே இருக்கும் எனக் கூறியிருந்தார்.
ஆனால் அவரது பேச்சுக்கு மாறாக எந்தவொரு அப்பேட்டும் வராததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, லியோ படத்தில் நடித்து பற்றி மிஷ்கின் அவ்வபோது வாய் திறந்து வருகிறார். விஜய்யுடன் நடந்த சண்டைக்காட்சி குறித்து அவர் பேசியிருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின், தம்பி விஜய் லியோ படத்தை பார்த்து விட்டான். அவனுக்கு படம் மிகவும் பிடித்திருந்தது என்று கூறியதாக தெரிகிறது.
இந்த பேச்சுதான் இப்போது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. ஆமாம். எங்கள் தளபதியை பார்த்து மிஷ்கின் எப்படி தம்பி என்று கூறலாம். அதுவும் ஒருமையில் அவரை எப்படி பேசலாம் என விஜய்யின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
தளபதி ரசிகர்களின் இந்த செயல், பலரையும் எரிச்சல் அடைய செய்துள்ளது. ஒரு சாதாரண பேச்சுக்கு இப்படி சீறுவதா, மிஷ்கின் ஒன்றும் அப்படி தவறாக கூற வில்லையே என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ரசிகர்கள் இப்படி அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவதை பார்க்க முடிவில்லை என்ற கமெண்ட்களையும் பார்க்க முடிந்தது. தரங்கெட்டு நடக்கும் தனது ரசிகர்களை விஜய் நிச்சயம் கேள்வி கேட்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.