நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் சரியாகவே நடிக்கவில்லை என இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லியோ
விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இது தொடர்பாக படக்குழு காஷ்மீர் செல்லும் வீடியோவை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்தது.
தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் லியோ படபிடிப்பு நடைபெற விஜயை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. லியோ படத்தில் உருவாகியுள்ள நா ரெடி பாடலும் விஜய் பிறந்தநாளன்று வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வசூலை வாரி குவித்த வாரிசு
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். லியோ சூட்டிங் முடிவடைந்த பிறகு, விஜய் 68 படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கும் நடிகர் விஜய், இந்தியாவின் முக்கிய நட்சத்திரமாக விளங்குகிறார்.
குடும்ப ஆடியன்ஸ்கள் விஜய் பக்கம் இருப்பதால் பெரும்பாலும் அவர் நடித்த திரைப்படங்கள் எளிதில் வெற்றி பெறுகின்றன. சமீபத்தில் அவர் நடித்து வெளியான வாரிசு திரைப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையை புரிந்தது.
பொங்கலன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தில் விஜய்யுடன், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், எஸ் ஜே சூர்யா, பிரபு, ஷியாம் உள்ளிட்ட பலர் நடித்தனர். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் சுமாராக இருந்தாலும் குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. பொங்கல் விடுமுறை நாட்களில் பலரும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வாரிசு திரைப்படத்தை வெற்றி பெற செய்தனர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தின் மூலம் தமிழில் நேரடியாக படம் தயாரித்து கல்லா கட்டினார்.
தப்பு தப்பாக நடித்தாரா விஜய்
இந்த நிலையில் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்த வாரிசு திரைப்படத்தின் விஜய் தப்பு தப்பாக நடித்ததாக, இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் கூறியிருக்கிறார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் வாரிசு திரைப்படம் பற்றி பேசுகையில், அந்தப் படத்தில் சரத்குமார் மட்டுமே சரியாக நடித்ததாகவும், வேறு எவரும் சரியாக நடிக்கவே இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஒரு தந்தை முன் அவரது மகன் இத்தனை ஆணவமாக நடிப்பாரா என கேள்வி கேட்டிருக்கும் அவர், இதனை விஜய் செய்ய வேண்டாம் என்றும், திரைப்படத்தில் அவர் இவ்வாறு செய்வதனால் ரசிகர்களும் இதையே பின்பற்றுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இயக்குனர் ராஜகுமாரனின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.