Saturday, September 14, 2024
- Advertisement -
HomeEntertainmentகமலுக்கு மீண்டும் வில்லனாகும் பிரபல நடிகர்… ஹெச். வினோத்தின் மாஸ்டர் பிளான்… யோகிபாபுவுக்கும் முக்கிய ரோல்...

கமலுக்கு மீண்டும் வில்லனாகும் பிரபல நடிகர்… ஹெச். வினோத்தின் மாஸ்டர் பிளான்… யோகிபாபுவுக்கும் முக்கிய ரோல் இருக்காம்

சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பண மோசடியில் அப்பாவி மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும், மோசடி கும்பல் என்னவெல்லாம் செய்து மக்களிடம் பணத்தை கறக்கிறார்கள் என்பது பற்றியும் சதுரங்க வேட்டையில் தெள்ள தெளிவாக விளக்கினார் ஹெச். வினோத். இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் எங்கு பண மோசடி நடந்தாலும், அதை சதுரங்க வேட்டையுடன் ஒப்பிட்டுதான் மக்கள் பேசுவார்கள்.

- Advertisement -

இப்படி தனது முதல் படத்தின் வெற்றியை நங்கூரமாய் அச்சிட்ட இயக்குநர், அடுத்ததாக கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை எடுத்தார். தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் திரைப்படங்கள் வந்திருந்தாலும், அதன் தன்மையிலிருந்து விலகி தனியாக காட்சியளித்து ரசிகர்களுக்கு கதை கூறியது தீரன் திரைப்படம். 90-களில் தொடரும் கொள்ளை சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் வட இந்திய கும்பலையும், தொழில்நுட்பம் வசதியில்லாத அந்த காலத்தில் அவர்களை பிடிக்க போலீசார் எந்தவிதத்தில் எல்லாம் கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதையும் கண் முன்னே காட்சிப்படுத்தி அசரவைத்தார் ஹெச். வினோத்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீரன் திரைப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படி தரமான இரண்டு படங்களைக் கொடுத்த ஹெச். வினோத், அடுத்ததாக அஜித்துடன் சேர்ந்து, இந்தி படமான பிங்க்கை ரீமேக் செய்தார். கதையை விவரிப்பதில் கண கச்சிதமாக செயல்படும் வினோத், ஏன் ரீமேக்கில் இறங்கினார் என்று அப்போதே சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் ஏதும் கிடைக்காமலே, நேர்கொண்ட பார்வை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

பிறகு, ஹெச்.வினோத் கதையில் அஜித் நடிக்க, வலிமை திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால் நினைத்த நேரத்தில் படத்தை எடுக்க முடியாமல் போக, கதையும் மாறிப்போனதால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து ஹெச். வினோத் – அஜித் கூட்டணியில் துணிவு திரைப்படம் வெளியாக, நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ஈட்டியது. இப்படி அஜித்துடன் மூன்று படங்களில் பணிபுரிந்த ஹெச். வினோத், தற்போது கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது. தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், அதனை முடித்ததும் இதில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கலந்த ஆக்சன் படமாக இது இருக்கும் என தெரிகிறது. இந்த படத்திற்காக கமல்ஹாசன் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ, சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது புதிய தகவலாக கமல்ஹாசன் – ஹெச்.வினோத் படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோக, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் முக்கியமான ரோலை ஹெச். வினோத் வைத்திருக்கிறாராம். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular