வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய், லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களுக்கு இல்லாத வகையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அதை சரிவர பயன்படுத்தி லியோ படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் உழைத்து வருகின்றார் லோகேஷ். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். அதேபோல் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.
இது போக மிஸ்கின் இன்னொரு வில்லனாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகியது. தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் சூட்டிங் நடத்தப்பட்டது. இதன் வீடியோக்களும் பகிரப்பட்டன.
காஷ்மீர் படப்பிடிப்பை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பை லியோ படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். இதில் விஜய் திரிஷா மற்றும் சஞ்சய் தத் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு வசனம் எழுதி வரும் இயக்குனர் ரத்னகுமார் சமீபத்தில், ஒரு கூலிங் கிளாஸின் உடைந்த பாகத்தோடு புகைப்படத்தை வெளியிட்டு Never say die எனப் பதிவிட்டார்.
இது விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானம் கதாப்பாத்திரத்தின் உடைந்த கண்ணாடியை நினைவுபடுத்துவது போல இருப்பதாக குறிப்பிட்டு கட்டாயமாக லியோ திரைப்படம் LCUல் இடம் பெறும் என ரசிகர்கள் உற்சாகத்தோடு பகிர்ந்தனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, நான் லியோ படத்தில் இல்லை.
ரத்னா ஏன் அப்படி செய்தான் என தெரியவில்லை. அவன் ஜாலியாக செய்திருப்பான். ஆனால் எல்லோரும் கற்பனை செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19-ம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.