இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, பிபாசா பாசு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் சச்சின். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இன்றளவும் சச்சின் படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் நடிகர் விஜயை ஸ்டைலாக காட்டியதுடன் ரொமாண்டிக் ஹீரோவாகவும் வேறு மாதிரி காட்டியது.
இருப்பினும் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களுடன் போட்டி போட்டு சச்சின் படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிட்டார். மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், சந்திரமுகி திரைப்படம் சக்கைப் போடு போட்டது. இதனால் பலரும் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் தோல்வி என்று கூறினர்.
ஆனால் சச்சின் திரைப்படம் முதல் நாளில் வசூல் செய்ததை விடவும் அடுத்த 3 நாட்களில் அதிக வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். இதுகுறித்து கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் பாடல்கள் பிரச்சனையை சந்தித்தன. இதனால் கடைசி நேரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் வேறு பாடலை பதிவு செய்து கொடுத்தார்.
இதனால் திட்டமிடட்டப்படி சச்சின் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. அதனை மீறி சச்சின் திரைப்படத்தை சந்திரமுகியுடன் வெளியிட்டேன். ரஜினியை எதிர்த்து தாணு இப்படி செய்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் வியாபாரமாகவே பார்த்தேன். தொடர் விடுமுறை இருந்ததால், எல்லா படங்களையும் மக்கள் பார்ப்பார்கள் என்று நம்பினேன்.
நான் நினைத்ததை போலவே சச்சின் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனக்கும் நல்ல லாபம் கிடைத்தது. அந்த லாபத்திற்கு காரணமாக நடிகர் விஜய்-க்கு ரூ.1 கோடி அன்பு பரிசாக எடுத்து கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர் சார் தான் வீட்டில் இருந்தார். சச்சின் படத்தின் வெற்றியால், பரிசாக விஜய் தம்பிக்கு ரூ.1 கோடி கொடுக்க விரும்புகிறேன்.
அதற்கான செக் கொண்டு வந்தேன் என்றேன். அதற்கு அவர், சச்சின் படத்தை சரியான நேரத்தில் வெளியிட்டு லாபம் என்று கூறியதே எங்களுக்கு மகிழ்ச்சி தான். நீங்கள் எந்த பரிசையும் அளிக்க வேண்டாம். நீங்கள் வந்ததையும், கூறியதையும் தம்பியிடம் கூறிவிடுகிறேன் என்று தெரிவித்தார். அந்த நம்பிக்கையே எனக்கு மீண்டும் துப்பாக்கி படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்தது என்று கூறியுள்ளார்.