கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு ஆணித்தரமான வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார் சியான் விக்ரம். 2011-ம் ஆண்டு வெளியான தெய்வ திருமகள் திரைப்படத்திற்கு பிறகு விக்ரமுக்கு எந்தவொரு திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ராஜபாட்டையில் தொடங்கி தாண்டவம்,
டேவிட், ஐ, பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான், மகான், கோப்ரா என அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனத்தையே பெற்றன.
இதில் மகான் திரைப்படம் விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்ப்பை பெற்றாலும், அது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் அந்த அளவுக்கு ரசிகர்களிடம் போய் சேரவில்லை. இதன்பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சியான் விக்ரம் நடித்து பலராலும் பாராட்டப்பட்டார். இருப்பினும் அதில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் அது விக்ரமுக்கான படம் என்று கூற முடியாது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அட்டகத்தியில் தொடங்கி மெட்ராஸ், கபாலி, காலா, சர்பாட்டா பரம்பரை என படத்திற்கு படம் தன்னை மெருக்கேற்றி வரும் பா. ரஞ்சித், இந்த முறை விக்ரமை வைத்து நிச்சயம் வெற்றி பெறும் முனைப்பில் இந்த படத்தை எடுத்து வருகிறார். தங்கலான் திரைப்படத்தின் அறிவிப்பின்போதே பலருக்கும் அதன் மீது எதிர்பார்ப்பு எழ, அடர்ந்த தாடி, நீண்ட முடி, கையில் தடி என மிரட்டும் தொனியில் காட்சியளித்தார் விக்ரம்.
இதில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கோலார் தங்க வயலில் கதைக்களம் நடைபெறுவது போல் எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விக்ரம் பிறந்தநாளன்று தங்கலான் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி பலரையும் புருவம் உயர்த்த செய்தது.
படத்தின் திரைக்கதை மிக வலிமையாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தை பேசப்படுகிறது. தங்கலானுக்காக பலரும் எதிர்பார்த்திருக்க, இதன் டீசர் வரும் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொங்கலன்று இந்த படம் வெளியிடப்படும் என பலரும் கூறி வந்த நிலையில், தங்கலான் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.