உலகமே எதிர்பார்த்து இருந்த ஜெயிலர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி இருப்பதால், ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். பேட்ட திரைப்படத்திற்கு பிறகு, ரஜினிக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக ஜெயிலர் அமைந்துள்ளது. பீஸ்ட் தோல்விக்கு பிறகு, இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் மூலம் மீண்டு வந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். சிலை கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகிறார் ரஜினியின் மகனான துணை காவல் ஆய்வாளர் வசந்த் ரவி. ஆனால் அதற்கு பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருப்பதாக கூறி எச்சரிக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் அது எதையும் பொருட்படுத்தாமல், சிலை கடத்தல் திருட்டு கும்பலை தேடும் வசந்த் ரவியை, வில்லன் விநாயகம் கொலை செய்கிறார். தன் மகனை தீர்த்துக் கட்டிய நபர்களை பழிவாங்க புறப்படுகிறார் முத்துவேல் பாண்டியன்.
இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும், திருப்புமுனைகளையும் தன்னால் முடிந்தளவு சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் நெல்சன். முதல் பாதியில் ரஜினியின் ஆக்சன் தூக்கலாக இருக்க, இரண்டாம் பாதியில் கதை எங்கெல்லாமோ பயணித்து, பின்பு மீண்டும் செட்டில் ஆவலாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்கு திருப்திகரமாக இருப்பதால், படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே, ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவில் மிகப்பெரிய சாதனை புரிந்ததாக சினிமா விநியோகஸ்தர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 26 கோடி ரூபாய் அளவுக்கு ஜெயிலர் திரைப்படம் வசூல் ஆகியுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்த்து 90 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு பக்க பலமாய், கிளைமாக்ஸ் காட்சிகளில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் தோன்றியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் பாலையாவையும் நடிக்க வைக்க நெல்சன் முயற்சி செய்தாராம். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போனதாக தெரிகிறது. மசாலா படங்களுக்கே உண்டான அனைத்து கலவையும் சேர்ந்த பாலையாவை நெல்சன் மிஸ் செய்து விட்டாரே என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.