இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள படம் விடுதலை. இரு பாகங்களாக தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ்நாடு விடுதலை படை இயக்கத்தின் தலைவர் தோழர் தமிழரசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விசாரணை படத்தில் காவல்துறையினர் அத்துமீறல்களையும் மிகவும் தத்ரூபமாக இயக்குநர் வெற்றிமாறன் படமாக்கியுள்ளார். புதிதாக போலீஸில் சேரும் சூரி, காவல்துறை செய்யும் அத்துமீறல்களை பார்த்துவிட்டு விஜய் சேதுபதி போல் இயக்கத்தின் மீது பற்று கொண்ட மக்களின் தோழராக மாறுவதே விடுதலை படத்தின் கதை.
முதல் பாகத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் விஜய் சேதுபதியை காவல்துறை எப்படி கைது செய்கிறது என்றும், இரண்டாம் பாகத்தை கைது செய்த விஜய் சேதுபதியை எப்படி என்கவுண்ட்டர் செய்கிறது என்பதே விடுதலை படத்தின் மொத்தப் படமாக உள்ளது. ஏற்கனவே விடுதலை முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது சென்சாரில் விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் விடுதலை இரு பாகத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட விடுதலை படம், இறுதியில் ரூ.40 கோடி பட்ஜெட்டில் முடிவடைந்துள்ளது.
இரு பாகங்கள் என்பதால் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இருப்பதன் காரணமாக படத்தின் விநியோகம் ரூ.100 கோடியை கடந்தும் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையில் வெளியான பாடல்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.