தமிழில் ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகும் நிலையில், முக்கிய பிரபலங்கள் அதில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த திரைப்படம் லவ் டுடே. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அதேசமயம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு டோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. ஏற்கனவே லவ் டுடே திரைப்படம் இந்தியில் ரீமேக்காகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தி ரீமேக் ரைட்ஸை பாந்தோம் ஃபிலிம்ஸ் கைப்பற்றியது. இந்தநிலையில், இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட ஏஜிஎஸ் அர்ச்சனா, பாந்தோம் பிலிம்ஸுடன் இணைந்து லவ் டுடே படத்தின் இந்த ரீமேக்கை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் வாரிசு ஜுனைத் கானும், ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமீர் கான் தற்போது நடிப்பில் இருந்து ஓய்வில் இருக்கும் நிலையில், தனது மகன் ஜுனைத் கானை படங்களில் நடிக்க வைத்து வருகிறார்.தற்போது இந்தியில் உருவாகும் இத்திரைப்படம் கோலிவுட்டை போலவே பாலிவுட் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் ஏற்கனவே வாரிசுகள் ரசிகர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், மீண்டும் ஒரு வாரிசுகள் முக்கியப் படத்தில் அறிமுகமாக உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.